Wednesday, May 2, 2012

எ வெரி லிட்டில் ஸிமால் ஸ்டோரி ஹாப்பெண்ட் டுடே




வழக்கமா கிளம்புற நேரத்த விட்டு இன்னிக்கு தாமதமா வேலைக்குக் கிளம்பினேன். வர்ற வழில தினமும் ஒரு பிச்சைக்காரரப் பார்ப்பேன். இன்னிக்கு அவரப் பாக்கல. நான் என்னைக்குமே அவருக்குப் பிச்சை போட்டதில்ல. பிச்சை யாருக்கும் போடுவதிலும் எனக்கு விருப்பமிருந்ததில்ல. 

எப்பயும் சாப்டுற ஹோட்டல்ல நுழைஞ்சேன். ரெண்டு இட்லி, ஒரு தயிர் வடை ஆர்டர் பண்ணினேன். எனக்கு எதுத்த டேபிள்ல ஒருத்தர் திரும்பி உக்கார்ந்து சாப்டுட்டு இருந்தார். எங்கயோ பார்த்த முகம். அவரு வேற யாரும் இல்ல. நான் தினமும் பார்க்கும் அதே பிச்சக்காரர்தான். அவரு கலெக்ஷன் முடிச்சிட்டு டிஃபன் சாப்டுட்டு இருந்தார். மதிய சாப்பாடுக்கு பார்சல் வாங்கிக்கிட்டார். இதுக்கு மேல அவருக்கு இன்னிக்கு முழுதும் வேற என்ன வேலை இருக்கப் போகுது. சாப்டுட்டு தூங்குறதத் தவிற. . .

அப்பதான் நினைச்சேன். ச்சே அவரு என்ன விட புத்திசாலி. நானும் அவரும் ஒரே ஹோட்டல்ல தான் சாப்டுறோம். அவரு தினமும் ரெண்டே மணி நேரம்தான் செலவு பண்றார். இதே சாப்பாட்டுக்கு நான் 12மணி நேரம், சில நேரம் அதுக்கும் மேல. . . . நாய்ப்பொழப்பு. இப்பிடி சுலபமா வாழ்க்கை ஓட்டத்தெரியாத எனக்கு, அந்த பிச்சக்காரர் என்ன விட மேதாவியா தெரிஞ்சாரு.

Wednesday, March 21, 2012

எங்க அந்த திருடன்!?

நான் அப்போ மூனாங் கிளாசு படிச்சிட்டு இருந்தேன்னு நினக்கேன். மேக்கருந்து(நெல்லைக்கு மேற்கே இருக்கும் விகே.புரம்) சந்திரன் மாமா வீட்டுக்கு அன்னிக்கு வந்துருந்தாங்க. சந்திரன் மாமா வந்தாலே ஒரே ஜாலிதான். அவங்க அடிக்கிற அரட்டைல நரசிம்மராவு கூட சிரிச்சிடுவாரு. ராத்திரி எட்டு மணி இருக்கும். சட்டுன்னு கரண்ட்டு போயிட்டு. பொதிகைல "துப்பறியும் சாம்பு" பாக்கலாம்ன்னு நினச்சேன். கட்டமனாப் போற கரண்ட்டு போயிட்டே! என்ன செய்ய!? அதான் சந்திரன் மாமா இருக்காங்களே! அவங்க கத சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. தார்சால மாமாவ சுத்தி பொடுசுங்க எல்லாம் வாயப் பிளந்துட்டு கத கேட்டுட்டுருக்கோம்.

திடீர்ன்னு வெளிய ஏதோ சத்தம்! யாரோ திடுதிடுன்னு ஒடுற சத்தம்ன்னு நினைக்கேன். எங்க பூட்டியாச்சிக்கு ஏதோ ஒரு அனுபவ துளிர் மிடுக்குன்னு வந்துச்சு போல. "ஏலே சந்திரா எல்லாத்தியும் உள்ளக்கூட்டியா! ஏதோ களவாணிப் பயலா இருக்கப் போறான்! அந்த கிரில் கேட்ட சாத்தி பூட்டுடா நடராசா'ன்னு இன்னொரு மாமவுக்கு ஆர்டர் போச்சு". ஆச்சி நினச்சாப்ல இன்னும் நாலஞ்சு பேரு யாரையோ தொறத்தி ஒடுறாங்க. திருடனேதான்.90'களில் மொத்தம் 160வீடுகளே உள்ள அந்த ஊரில் திருட்டு சகஜமாகிப் போன நேரம்.

பெருசுங்க எல்லாம் பயந்து கிடக்காங்க. தகவல் சொல்ல அண்டவீட்லருந்து யாரும் வரல. கிட்டத்தட்ட எல்லார் வீடும் பூட்டி உள்ள அடஞ்சிருப்பாங்க. ஊரே இருட்டுலக் கிடக்கு. ஒரு அரமணி நேரங்கழிச்சு டூரிஸ்ட் நைனா தாத்தா பெரிய பேட்டரி லைட்டோட வீட்டுப் பக்கம் வந்தாரு. கூட கம்பு, கட்டையோட நாலு பேரு.

பூட்டியாச்சி தொண்ட செரும சன்னல் பக்கமா தலைய சாச்சு சத்தம் குடுத்துச்சு. "என்னவே நைனா! என்ன ஆச்சு? களவாணிப் பய எவனும் ஊருக்குள்ள புகுந்துட்டானா?"ன்னு ஆச்சி கேட்டா. அவரு "ஆமா ஆச்சி வடக்கால கோழிப் பண்ணேல திருடிட்டானுக. பண்ணயார் வீட்ல குடியிருந்த பொம்பளை செயின அத்துட்டானுக. இந்த கரண்ட்டு கம்பிய வேற இவனுவ அத்துப்பூட்டானுவோ. அதான் அவனுகள தேடிட்டு இருக்கோம். நாலு பக்கமும் ஆள் போயிருக்கு; கதவ நல்லா பூட்டிக்கோங்க"ன்னு சேதி சொல்லிட்டுப் போனாரு.

               நேரங்கடந்துருச்சு. தெருவே வெறிச்சோடிக் கிடக்கு. ஒரு ஓம்பதர இருக்கும். சந்திரன் மாமா கிரில் கேட்ட தொறந்து தையிரியமா வெளிய வந்து நின்னாங்க. எங்களுக்கு ரொம்ப பயம். தொறந்த நிமிஷத்துல வீட்டுக்குள்ள திருடன் புகுந்துட்டா என்ன செய்யன்னு பயந்து கிடந்தோம். இந்த மாமா கிழக்கையும், மேக்கையும் ஒரு நோட்டம் போட்டுட்டு. "ஏ! அவனுவ இன்னுமா இங்க சுத்திட்டு இருக்கப் போரானுவ. போயி பொழப்பப் பாருங்கடே. ஏ ஆச்சி நீ சோத்தப் போடு"ன்னு மாமா சத்தம் குடுக்க ரெண்டு பேரு பேசிட்டே வாசல் பக்கம் மாமவ கடந்து போனாங்க.

மாமா ரொம்ப ஆர்வமா போன ஆளுங்கட்ட "அண்ணாச்சி அந்தக் களவாணிப் பயலுவோ என்ன ஆனானுவோ? பிடிபட்டாணுகளா?"ன்னு கேக்க, அவங்க மாமாட்ட " களவாணிப் பயலுக வடக்கால ஓடிப் போய்யிட்டானுவ அண்ணாச்சி. பிடிக்க ஆளுங்க போயிருக்கு. நாங்க ஈபி ஆபீஸ் வர போகுதோம்.வாரீகளா"ன்னு பதில் வந்தது. மாமா "ஓ! சரிங்க அண்ணாச்சி, இருக்கட்டும். நீங்க அந்த சோலிய முதல்ல பாருங்க."ன்னு சொல்லிட்டு உள்ள வந்தாங்க.

செத்த நேரத்தில் பரபரப்புடன் டூரிஸ்ட் நைனா தாத்தாவும், கூட மிட்டாய்தாத்தாவும் கூட நிறைய ஆட்களும் வேகமா வந்தாங்க. மாமா வாசலக் கடக்கும் போது "ஏம்ப்பா இங்க ரெண்டு பேரு போனத பாத்தியா?"ன்னு மிட்டாய் தாத்தா கேட்டாங்க. "ஆமா ரெண்டு பேரு ஈபி ஆபீஸ் போறாதா சொன்னாங்க. என்ட நின்னு பேசிட்டு இப்பதான் இந்தாக்குல போனாங்க. ஏன்? என்ன விசயம்"ன்னு சந்திரன் மாமா திரும்பக் கேட்டாங்க.

நைனா தாத்தா "அய்யோ அவனுவ சாவகாசமாவா உம்மட்ட பேசிட்டுப் போனானுவ? உங்கள ஒன்னும் பண்ணலையா? அவனுவ கைல்ல கத்தி வச்சுருக்கல?"ன்னு கேக்க, மாமா பதற்றத்துடன் "கத்தியா! என்னவே சொல்லுறீரு? அவனுவ உள்ளூர்வாசின்னுல நினச்சேன்" ன்னு நடுநடுங்கி கேக்க, நைனா தாத்தா "அவனுவ திருட வந்த களவாணிப் பயலுவ. நீங்க தையிரியமா மறிச்சுப் பேசிருக்கீகளே! முன்னமே தெரிஞ்சிருந்தா புடிச்சிருப்பீக போல தம்பி." ன்னு மாமாவ கிலிஏத்திட்டுப் போனாங்க. கொலப்பசில இருந்த மாமாவுக்கு பயத்துலயும், கடுப்புலயும் ஈபிக்குப் போறதா சொல்லிட்டுப் போன அந்த ரெண்டுக் களவாணிப் பயலுக நினச்சு சோறு இறங்கல அன்னிக்கு ராத்திரி.

இத்தனை வருஷம் கழிச்சு இப்போ நினச்சாலும் சாகவாசமா திருட்டுப்பயலுகட்ட வெள்ளந்தியா பேசின சந்திரன் மாமாவ நினச்சா சிரிப்புதான். :)



அண்ணாமலை ரஜினி வாய்ஸ்ல அப்பா வச்ச சேலஞ்ச்! :)))

ஒரு நாள் ஆபீஸ் கிளம்பிட்டு இருந்த நேரம், அப்பாட்டருந்து ஃபோன் வந்தது. உரையாடல் இதோ:

நான்: "என்னங்கப்பா இன்னிக்கு ரெஸ்ட்டா? என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"

அப்பா: "ஆமா, வீட்லதான் இருக்கேன் (அப்பா சலிப்புடன்). சாப்டியாடா?"

நான்: " ஆச்சே! நீங்க சாப்டல?"

அப்பா: "குடுத்து வச்சவன் நீ. நான் எங்க சாப்பிட? மணி பத்தாச்சு. இன்னும் உங்க அம்மா சாப்பாடு போடுறதா எண்ணமில்ல போல."

நான்: "எத்தன வருஷம் பொழம்பிட்டு இருப்பீங்க?"

அப்பா: "உங்க அம்மாவுக்கு புத்திமதி சொல்றது!?"

நான்: "ம்க்கும். 26வருஷமா நீங்க சொல்லிட்டு இருக்குறதையா நான் சொல்லிக் கேக்கப் போறாங்க? வாய்பில்லப்பா. Your Wife! Your Problem. :P"

அப்பா: "ஓஹோ! அப்பிடியா சொல்ற? மவனே இன்னிக்குத் தேதிய டைரில குறிச்சு வச்சுக்கோ. இதுக்காண்டியே உனக்கு ஒரு கல்யாணத்த சீக்கிரம் பண்ணி வைக்குறேன். அப்புறம் இருக்குடா உனக்கு.
நாலு வருஷம் கழிச்சு நொந்து நூடுல்ஸ் ஆகி திரும்ப என்ட வருவ. அப்பா' என் பொண்டாட்டி என்னக் கதறக் கதறக் கொடும படுத்துறா! என்னான்னு என்னைக் கேக்க சொல்லுவேல. அடி தாங்காம வந்து நிக்கிற உன்ட அப்போ திருப்பி சொல்றேன்டா இந்த டயலாக்க 'Your wife! Your problem!'ன்னு."

நான்: "அவ்வ்! அப்பா என்னப் பழிவாங்க வேண்டாம். இந்தா என்னன்னு நியாயத்த இப்பவே அம்மாட்ட கேட்டுட்டு உங்களுக்கு உடனே சாப்பாடு போட சொல்றேன். :P சரண்டர்ர்ர்!"

#கொலைவெறி முற்றும்.

Friday, March 9, 2012

என் முதல் முறை விமானப் பயணம்! கிலியூட்டும் அனுபவம்.





     டெல்லியில் ஒரு வேலை வந்தது. அதை முடிக்க நம்மள விட்டா ஆள் கிடையாதுன்னு போயிட்டு வா ராசான்னு கம்பெனில அனுப்பி வச்சாய்ங்க. டிக்கெட் வந்து சேர்ந்தது. திங்கக் கிழமை காலை 06:35க்கு ஃப்ளைட் டைமிங். பெங்களூர் டூ டெல்லி. ஸ்பைஸ் ஜெட்லருந்து மெசேஜ் வந்தது. “டெய்லி நிறைய பேரு எங்க பஸ்ல போறதால ஓவர் கிரவ்டா இருக்கும். ஆதால 150நிமிஷங்கள் முன்னாடியே வந்துருங்க. பஸ் கிளம்புறதுக்கு 45நிமிஷம் முன்னாடியே வந்துரணும்”ன்னு கடுப்ஸ் ஏத்தினானுக. அடப்பாவி மக்கா ஒரு பிளைட் பிடிக்க இரண்டு மணி நேரம் முன்னாடியே வந்து உக்காரணுமா. உலக கொடுமையேன்னு நடுராத்திரி 3.00 மணிக்கு அலாரம் வச்சு கிளம்பினேன். 4 மணிக்கு கேப் வரச்சொன்னேன். அவன் 4.45க்கு லேட்டா வந்து டெர்ரர் என்ட்ரி குடுத்தான். அய்யா நீதான் எனக்கு கடவுள் மாதிரி இப்போ. நான் மட்டும் ஃப்ளைட் இன்னிக்கு ஏறலேன்னா என் பாஸூ அவரு ஹோண்டா சிட்டிய எம்மேல ஏத்திக் கொன்னுருவாறு உள் மனசு படபடத்தது.
     அஞ்சரை மணிக்கு ஏர்போர்ட் கொண்டுவந்து விட்டான் புண்ணியவான். ஏங்க ஆரப்பாளையம் பஸ் எங்க நிக்கும்ன்னு கேக்குறாப்புல ஸ்பைஸ் ஜெட் எங்கன்னு கேட்டு முழிச்சிட்டு இருந்தேன். அப்புறம் ஒரு வழியா அவிய்ங்க கவுண்டருக்குப் போயி டிக்கெட் காமிச்சு என் பொட்டிய ஒரு பக்கம் தள்ளி விட்டேன். கைல ஒரு பேக்கோட போர்டிங்க் பாஸ் வாங்கி உள்ள போனேன். முதல் கட்டம் முடிஞ்சது.
     இரண்டாம் கட்டம். இப்போ செக்யூரிட்டி செக்கிங். ஒரு ட்ரே குடுத்தாணுக. இது எதுக்கு ஃப்ளைட்டுக்குள்ள சாப்பாட்டுக்கான்னு நினைச்சேன். அவனவன் கைல, பாக்கெட்ல இருக்குற மொபைல்,லேப்டாப், பர்ஸ்ன்னு எடுத்து வச்சு ஒரு கன்வேயர்ல தட்டி விட்டானுக. இப்போ என் டெர்ம். எல்லாத்தையும் ட்ரேல போட்டுட்டேன். வெரசா நகர்ந்து போயி 'அண்ணே எங்கிட்ட பாங்க் லோனத் தவிர ஒன்னுமில்ல'ன்னு மெட்டல் டிடெக்டர் வச்சிருக்கவன் முன்னாடி கைய்யத் தூக்கி நின்னேன். பின்னாடி நாலு பேரு என்னத் திட்டிட்டு இருந்தானுக. திரும்பிப் பாத்தா என் ட்ரேவ கன்வேயர்ல உள்ள தள்ளி விடலையாம். விடுங்க பாஸ். விடுங்க பாஸ்ன்னு நான் போயி உள்ள தள்ளிட்டு வந்தேன். எல்லாம் முடிஞ்சதும் ட்ரே வெளிய வந்தது. நான் எல்லாத்தையும் பேக்ல போட்டுட்டு பர்ஸ்ல இருந்த 258ரூவா கரக்ட்டா இருக்கான்னு சரிபார்த்தேன். என் பேக் மேல உள்ள டேக்ல “security checked okay” (செக் பண்ற அளவுக்கு இவன் வொர்த் இல்லே)ன்னு ஒரு சீல் குத்தினானுக.
     மூனாம் கட்டம். ஒரு பஸ்ஸுக்குள்ள போகச் சொன்னானுக. எதுத்தாப்புலதான் நாம போகவேண்டிய வண்டி நின்னுது. நடந்து போகக் கூடாதாம். பஸ் கொண்டு போயி ஃப்ளைட் முன்னாடி போயி விட்டது. ரெண்டு பொண்ணுங்க வர்ற கஸ்டமர எல்லாம் கும்புடுறேன் சாமி! கும்புடுறேன் சாமின்னு! சொல்லிட்டு இருந்ததுக. ஹி ஹி காமெடியா இருந்தது. சும்மா சொல்லக் கூடாது சோக்கவும் இருந்துதுக.
     ஃப்ளைட்டுக்குள்ள போயாச்சு. எல்லா சினிமால காமிக்கிற மாதிரிதான் உள்ளயும் இருந்தது. ஆஹா! நமக்கு ஜன்னல் சீட்டுடோய். குருவி படத்துல திரிஷா சீட் பெல்ட் போடத்தெரியாம முழிக்கிற மாதிரி நாம முழிக்கக் கூடாதுன்னு நானே பெல்ட்டை லாக் பண்ணிட்டேன். சரி ஓபன் பண்ணிப் பாக்கலாமேன்னு நினைச்சா அவ்வ் இப்போ அது திறக்க மாட்டேங்குது. ஒரு ஏர் கோஸ்ட் பொண்ணு ஏதோ சைகைல டான்ஸ் ஆடிட்டு இருந்தது. என்னான்னு கேட்டா ஃப்ளைட்ல ஓட்டை விழுந்துச்சுன்னா, என்ஜின் வேலை செய்யலேனா என்ன பண்ணனும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்குறதா கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன். அடப்பாவிகளா உங்க ஸ்டார்ட்டிங்கே சரியில்லேன்னு நொந்துக்கிட்டேன். அந்தப் புள்ள பெல்ட் எப்பிடி கழட்டனும்ன்னு சைகை காமிச்சிட்டு இருந்தது. என் மானம் தப்பிச்சது. செல்ஃபோன அணைக்கச் சொன்னாய்ங்க. நான் முன்னேற்பாடா ஏர்போர்ட் வரும் போதே அனச்சுட்டேன். என் அதிபுத்திசாலித்தனம் அவிங்களுக்குத் தெரிய வாய்ப்பில்ல.
     கேப்டன் வெங்கெடேச நாராயண் உங்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உத்திரவாதம்ன்னு மைக்ல சொன்னாய்ங்க. ஏழுகுண்டல வாடா! வெங்கடேசா! என்ன உசுரோட ஊரு போயி சேத்துருன்னு வேண்டிக்கிட்டேன். டவுண் பஸ் ஒட்டுறாப்புல வளச்சி வளச்சி தலிவர் வண்டிய ரன் வேக்கு கொண்டுவந்தாரு. முன்னாடி ஒரு கிங்பிஷர் கிளம்பி மேல போயிட்டு இருந்தது. கரீட்டா ரன் வே நடுவால வண்டி வந்து நின்னது. நான் பிராக்கு பாத்துட்டு இருந்தேன். திடீர்ன்னு செத்த நேரத்துல என் ஈரக்குலை நடுங்குறாப்புல சும்மா ஜிவ்வுன்னு 600கிமீ வேகத்துல கிளம்புச்சு. அப்பிடியே வண்டி டக்ன்னு மேல ஏறிருச்சு. ஏண்டா இப்பிடிதான் சொல்லாம கொல்லாம வண்டியக் கிளப்பி என்னப் போல முதத்தடவ வண்டி ஏறுறவைங்களுக்கு பீதியக் கூட்டுறீங்களான்னு நினைச்சுக்கிட்டேன். மேல ஏற ஏற எனக்கு வயித்தக் கலக்குது, தலை சுத்துது, வாந்தி வார மாதிரி இருக்கு. அய்யோ எங்கூரு ராட்ணம் பரவாயில்ல. மேல ஏற ஏற கீழப் பாத்தா கூகிள் மேப் பாக்குறாப்புல ஆயிருச்சு.
     ஸ்பைஸ் புள்ளிங்க ஏதோ கேட்டுட்டு வந்ததுக. டீ, காபி விக்கிறாய்ங்கன்னு அப்புறம்தான் தெரிஞ்சிக்கிட்டேன். ஆகா இவிங்கிட்ட வாங்குறதுக்கு பர்ஸ்ல வெயிட்டேஜ் இல்லேன்னு தூங்குறாப்புல நடிச்சிட்டு இருந்தேன். பாவம் யாரு பெத்த பிள்ளைகளோ இங்க வந்து டீ யாவரம் பாக்குது. நமக்குதான் வாங்க வாக்கில்லையே நீ மூடுடான்னு மைண்ட் வாய்ஸ் கேட்டது. வண்டி வாஸ் கீப் கோயிங், கோயிங் அண்ட் கோயிங். . .
     இன்னும் அரைமணி நேரத்துல டெல்லி வந்துரும். 160மயில் இருக்குன்னு சொன்னாய்ங்க. ஒவ்வொரு வாட்டியும் டைவர் லெஃப்ட்,ரைட்டுன்னு வளையும் போது ஒரே "கிர்" பீலிங்க் தான். ஹார்ட் துடிக்குதான்னே தெரியல. கண்ணு எல்லாம் சொருகுது. வண்டி வர வர கீழ வந்துட்டே இருக்குது. நமக்கு டென்ஷன் அதிகமாயிட்டே இருக்கு. டெல்லிக்கு மேல 200அடி தூரத்துல பறந்துட்டு இருக்கோம். டைவர் யூ டர்ன் எடுக்குறாரு. லெஃப்ட், ரைட்டுன்னு அங்கயே சுத்திட்டு இருக்காரு. டக்குன்னு ஸ்லிப் ஆயி ஒரு ஜெர்க் வந்துச்சு. எனக்கே பல்ஸ் ரேட் எகிற ஆரம்பிச்சிருச்சு. ஜல்லுன்னு கீழ வந்துட்டே இருந்து டம்ன்னு ஒரு பெரிய சத்தம். குடியக் கெடுத்திட்டானுகடா! அவ்ளோதான் உங்குலசாமி அருள் உனக்கு.டெல்லில நம்ம குலசாமி அவுட் ஆஃப் கவேரேஜ்ன்னு நெனச்சேன். அப்புறம் பாத்தா வண்டி தரைல ஓடிட்டு இருக்கு. எப்படா கீழ இறக்குனீங்க? அவ்வ்!!! ஐ சேஃப்லி லாண்டேட் இன் டெல்லி. சாமி தப்பு நடந்து போச்சு. உன் பவர் டெல்லிலயும் இருக்குன்னு நெனச்சுக்கிட்டேன்.
சுபம்.
அடுத்த முறை பாராசூட்லருந்து குதிக்க நேர்ந்தா அதயும் போடுறேன்.J  

Thursday, February 9, 2012

Difference between manufacturing and production.





Manufacturing: உற்பத்தி
Production: தயாரிப்பு

     உற்பத்தி (Manufacturing) மற்றும் தயாரிப்பு (Production) இரண்டும் கிட்டத்தட்ட ஒரே அர்த்தத்தைக் குறித்தாலும், தொழிற்நுட்ப கண்ணோட்டத்தில் வேறுபாடுகள் உண்டு.

     உற்பத்தி(Manufacturing) : உற்பத்தி எனப்படுவது மூலப் பொருள்களை(raw materials) முழுமையாக நிறைவு செய்யப் பட்ட உற்பத்திப் பொருளாக மாற்றும் செயல்முறை ஆகும். அவ்வாறு ஒரு உற்பத்திப் பொருள் இறுதி வடிவம் அடைய பல்வேறு இடைநிலை செயல்முறைகளைச்(various processes) செய்ய வேண்டியிருக்கும்.

உதாரணமாக ஒரு கார் உற்பத்தியானது பல படி நிலைகளைக் கொண்டது. சுருக்கமாக ஒரு காரை தயாரிக்க சில இடைநிலை செயல்முறைகள் அவசியமாகிறது.
அவை கீழ்க்கண்டவாறு:
1) இன்ஜின் பொருத்துதல்
2)  உதிரி பாகங்களை இணைத்தல்
3)  காரின் கட்டமைப்புகளைப் பொருத்துதல்
4)  சக்கரங்களைப் பொருத்துதல்
5)  ஒழுங்கமை சரிபார்த்தால்(alignments)
6)  கதவுகள் பொருத்துதல்
7)  வண்ணப் பூச்சு அடித்தல்
மற்றும் பல....
இத்தனை படிநிலைகளும் நிறைவு பெற்றால் மட்டுமே ஒரு காரின் உற்பத்தி நிறைவு பெறுகிறது.  
    

ஒரு நிறைவான பொருளை உற்பத்தி செய்ய தேவையான
பொருட்களைப் பெற அந்த நிறுவனம் விநியோகர் ஒருவரை அல்லது பலரை (Vendors and Suppliers) சார்ந்திருக்கலாம்.

     தயாரிப்பு(Production): தயாரிப்பு எனப்படுவது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள உள்ளீடுகளை(input) அடுத்த செயல்முறைக்கு ஏற்ற பொருளாக வெளியீடு(output) செய்வது ஆகும்.
உதாரணம்: ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் ஒரு நாளில் ஒரு உதவியாளர் 100 டயர்களுக்கு காற்று அடித்திருக்க வேண்டும் என இலக்கு(target) கொடுக்கிறது. அவர் ஒரு நாளில் 100 டயர்களில் 85 டயர்களுக்கு காற்று நிரப்புகிறார். அது அன்றைய அந்த குறிப்பிட்ட படிநிலையின் வெளியீடு(Production output) ஆகிறது.

ஒரு முழுமயான உற்பத்தி வெளியீடை(Complete product output) ஒரு தயாரிப்பு எனலாம். ஆனால் ஒவ்வொரு இடைநிலை செயல்முறை வெளியீடுகளை(In ternal process's output) முழுமையான உற்பத்தி எனக் கொள்ளலாகாது.



Wednesday, January 4, 2012

அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் - தெளிவான விளக்கங்களுடன். . .

     




            "கழுத கெட்டா குட்டிச் சுவரு." இந்த உவமைய இதுக்கு சொல்றேன்னு தப்பா நினைக்க வேணாம். தடுக்கி விழுந்தவரெல்லாம் B.Tech., B.E., படிச்சு வெளியே வராங்க. இரண்டுக்கும் வித்தியாசம் என்னன்னு கேட்டா certificate மட்டும் தான் வேறு வேறு. பாடத்திட்டம் எல்லாம் ஒன்று என்பார்கள். அது அப்பிடித்தானா? அலசுவோம். மேலும் படிங்க.

       We will take these two words  "Technology" and "Engineering" . இதை தமிழ் படுத்திப் பார்த்தால் முறையே "தொழில்நுட்பம்" மற்றும் "பொறியியல்". இவற்றுக்கு மூலாதாரம் "Science" இதன் பெயர்ப்பானது "அறிவியல்". இவற்றுக்கான விளக்கங்களுடன் வேறுபாடுகளைக் காண்போம்.

அறிவியல்(Science) : அறிவியலானது இயற்கை உலகிலிருந்து தொடர் கண்டுபிடிப்புகளைம், மற்றும் புரிதலையும் உள்ளடக்கியது.

உதாரணம் : நீராவிக்கு உந்து விசை உண்டு என்றறியப்பட்டதை அறிவியல் எனக் கொள்ளலாம்.

தொழில்நுட்பம்(Technology): ஜேம்ஸ் வாட் நீராவியின் விசையைக் கொண்டு எந்திர விசையாக மாற்றலாம் என பயன்பாட்டுக்கான நுட்பத்தைக் கண்டறிந்தது "தொழில்நுட்பம்" ஆகும். அதாவது நீராவி எஞ்சினைக் ஆராய்ச்சிக் கூடத்தில் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்ததை "தொழில்நுட்பம்" எனலாம்.

பொறியியல்(Engineering): தொழில்நுட்பத்தைக் கொண்டு பயன்பாட்டுக்கான முழுமையான இயந்திரம் அல்லது கருவியை உண்டாக்குவது "பொறியியல்" ஆகும்.
உதாரணம்: முதல் நீராவி என்ஜின் ரயில்.

இப்போ கொஞ்சம் தெளிவாகியிருப்பீங்கன்னு நம்புகிறேன்.

by
Raja Shankar J